`ஆட்சியை பார்த்துக்கொண்டு, கட்சியை விட்டுவிட்டனர்’- மகாராஷ்ட்ரா பற்றி அமைச்சர் துரைமுருகன்

`ஆட்சியை பார்த்துக்கொண்டு, கட்சியை விட்டுவிட்டனர்’- மகாராஷ்ட்ரா பற்றி அமைச்சர் துரைமுருகன்
`ஆட்சியை பார்த்துக்கொண்டு, கட்சியை விட்டுவிட்டனர்’- மகாராஷ்ட்ரா பற்றி அமைச்சர் துரைமுருகன்

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் முப்பெரும் விழா, இனமான எழுச்சி நாள் விழா மண்ணடி தம்புசெட்டி தெருவில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் துரை முருகன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவின்போது தயாநிதி மாறன் பேசுகையில், “திராவிடம் தான் ஆங்கிலம் படிக்கச் சொன்னது. அதனால் தான் நம் பிள்ளைகள் இன்று மென் பொறியியல் துறையை ஆள்கிறார்கள். நான் யாரையும் குறைவாக சொல்லவில்லை. ஆனால் இவர்களால் இந்தி மட்டுமே படிக்க வைக்கப்பட்ட வட மாநிலத்தவர்கள் நம் தமிழகத்தில் கூலித் தொழிலாளர்களாக பணி செய்கிறார்கள்.

நம் பிள்ளைகளுக்குத் தேவையெனில் தொழில் கருதி எந்த 3 ஆவது மொழியையும் கற்றுக்கொள்வார்கள். புதிய கல்விக் கொள்கையின் மூலமாக 8 ஆம் வகுப்போடு நம் பிள்ளைகளை தொழில் செய்ய அனுப்புவதே அவர்களது நோக்கம். நாம் அதை ஒரு காலமும் அனுமதிக்கமாட்டோம். ஏனெனில் நாம் இந்திக்கு அல்ல; இந்தித் திணிப்பிற்கு எதிரிகள். வடமாநிலப் பிள்ளைகள் 2 மொழி படிக்க வேண்டும். நம் பிள்ளைகள் 3 மொழி படிக்க வேண்டுமா? எதற்கு இந்த பாகுபாடு?” என்றார்.

அதன்பின் அமைச்சர் துரை முருகன் பேசுகையில், “காலில் போடும் செருப்பை கையில் வைத்துக் கொண்டும், தோளில் போடும் துண்டை அக்குளிலும் வைத்துக் கொண்டிருக்கும் நிலை மாறக் காரணமானவர் தந்தை பெரியார். ஆண்டான்- அடிமையை ஒழிக்க காரணமானவர் பெரியார். இன்னும் வட மாநிலங்களில் ஆண்டான் - அடிமை நிலை உள்ளது.

அம்பேத்கரை விட பெரிய அரசியலமைப்பு மேதை எவரும் இல்லை. ஆனால் அவர் பிறந்த மகாராஷ்டராவில் கூட ஆண்டான் - அடிமை பாகுபாடு நிலவுகிறது. நம் முப்பாட்டன் நீதிகட்சி தியாராயர் தொடங்கிய பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தான் இப்போது படிப்படியாக வளர்ந்து காலையிலும் உணவு வழங்கும் திட்டமாகி பசியாற்றுகிறது. கட்சியையும் ஆட்சியையும் ஒரு சேர கவனிக்காததால் தான் மஹாராட்டிராவில் ஆட்சி பறிபோனது. ஆட்சியை பார்த்துக் கொண்டே அவர்கள் கட்சியை விட்டுவிட்டார்கள். ஆனால் நம் முதல்வர் இரண்டையும் சரிவர கவனிக்கிறார். கலைஞரிடமிருந்து கற்றவர் இவர்.

இந்தியாவில் உள்ள முதல்வர்களில் கவனிக்கத்தக்கவராக இருக்கிறார் நம் முதல்வர். எல்லோர் கண்களும் இவரை நோக்கியே. மோதியும், அமித்ஷாவும் நம் முதல்வரை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com