போக்குவரத்து காவலரை அமைச்சர் உதவியாளர் தாக்கியதாக புகார்
திருச்செந்தூரில் போக்குவரத்து காவலரை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவரிடம் மன்னிப்பு கோர வைப்பதாக அமைச்சர் தரப்பு கூறி சமாதானப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை, போக்குவரத்து காவலர் ஓரமாக நிறுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஓட்டுநர், காரை சாலையோரமாக நிறுத்திய நிலையில், தனியார் விடுதியில் இருந்து வெளியே வந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் இது பற்றி கேட்டுள்ளார்.
அப்போது போக்குவரத்து காவலருக்கும், அமைச்சரின் உதவியாளருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததாக தெரிகிறது. இது பற்றி அறிந்த அமைச்சரின் தரப்பு, போக்குவரத்து காவலர் முத்துகுமாரிடம் சமாதானம் பேசியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே, போக்குவரத்து காவலர் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.