ஓபிஎஸ் சர்ச்சை: அது என்ன ராணுவ விமான ஆம்புலன்ஸ்?
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்று, சந்திக்க முடியாமல் சென்னை திரும்பிய சம்பவம் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பு விவகாரத்தை காட்டிலும் ராணுவ ஆம்புலன்ஸ் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலா சீதாராமனை சந்திக்கதான் டெல்லி வந்ததாகவும், தனது சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது, ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை தந்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கவே டெல்லி வந்ததாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்தார். மதுரையில் இருந்து ஜூலை 2-ல் ஓ.பன்னீர் செல்வத்தின் இரண்டாவது சகோதரர் பாலமுருகன் சென்னை கொண்டு வரப்பட்டார்.
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகனை உடனடியாக சென்னை கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். அப்போது, இரண்டு தனியார் விமான ஆம்புலன்ஸை ஓ.பன்னீர்செல்வம் முதலில் அணுகியுள்ளார். ஆனால், உடனடியாக வரமுடியாத சூழலில் இருப்பதாக தனியார் விமானங்கள் கூறிவிட்டன. அந்தச் சூழலில் பெங்களூருவில் இருந்து ராணுவ விமான ஹெலிகாப்டர் உடனடியாக ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது.
பேரிடர் காலத்தில் மட்டுமே ராணுவ விமானம் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில், பாதுகாப்பு விதிகளை தளர்த்தி ஓபிஎஸ் சகோதரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பேரிடர் காலத்தில் மட்டுமே ராணுவ ஹெலிகாப்டர் அனுப்ப முடியும் என்ற போதும், மனிதாபிமான அடிப்படையில், தனிப்பட நபர்களுக்கு அவசர சிகிச்சை காலங்களில் ஹெலிகாப்டர் அனுப்பலாம் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட வகையில் ராணுவ ஹெலிகாப்ட அனுப்ப பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதல் வேண்டும். அதோடு, ஹெலிகாப்டர் பயணத்திற்கு உரிய தொகையை ராணுவத்திடம் செலுத்திவிட வேண்டும்.
அது என்ன ஏர் ஆம்புலன்ஸ்?
- ஒரு அவசர சிகிச்சையில்(ஐசியு) உள்ள நோயாளியை அதே பாதுகாப்புடன், உபகரணங்களுடன் ஆகாய மார்க்கமாக கொண்டுசெல்ல பயன்படுவது தான் விமான ஆம்புலன்ஸ்.
- இது 24/7 மற்றும் 365 நாட்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்
- அவசர சிகிச்சைக்கு உண்டான மல்டி-ஸ்பெஷாலிட்டி வசதி உள்ளே இருக்கும்
- இந்திய ராணுவத்தில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர், விமான ஆம்புலன்ஸ், ஆம்புலன்ஸ் கடல் விமானம் ஆகியவை உள்ளன
- நோயாளிகளை இடமாற்றம் செய்வது, உடல் உறுப்புமாற்றம், மீட்பு பணி, பேரிடர் பணி உள்ள பணிகளுக்கு ஆம்புலன்ஸ் விமானங்கள் பயன்படும்
- சியாச்சின் போன்ற போக்குவரத்து வசதியில்லா இடங்களுக்கு செல்வதற்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது.