ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு

ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு

ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு
Published on

தூத்துக்குடி குமரகிரி பகுதியில் உள்ள உப்பாற்று ஓடையில் கொட்டபட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகளை 8 வாரத்தில் அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தாலுகாவில் பொதுப்பணித்துறை கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்டு உப்பாற்று ஓடை உள்ளது. இந்த உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த இரண்டு மாத காலமாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டபிடாரம்,கடம்பூர்,மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவத்தில் கனமழை காரணமாக 2016 அக்டோபர் மற்றும் 2015 நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உப்பாற்று ஓடையில் புதுக்கோட்டை மேம்பாலம் அருகே ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது குமரகிரி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை ரசாயன கழிவுகள் ஓடையில் கொட்டப்பட்டிருப்பதால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது என கூறப்பட்டுள்ளது. 

மேலும் “உப்பாற்று ஓடையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அகற்றி தூர்வார கோரி 2014 ல் மனு அளிக்கபட்டது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகள் ஆற்றில் மலைபோல் குவிக்கபட்டதால் 2015 ல் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளபெருக்கால் தண்ணீர் திசை திருப்பபட்டு தூத்துக்குடி நகரில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.2015 ல் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்ததிற்கு உப்பாற்று ஓடையில் ஆக்கிரமிப்பு அறியபட்டுள்ளது அகற்றுவதற்கு 84 கோடி ரூபாய் அரசிடம் கேட்கபட்டுள்ளது.நிதி கிடைத்தால் ஆற்றினை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளபடும் என பதில்மனு அனுப்பினர். இந்தாண்டு பருவ மழையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் உப்பாற்று ஓடையில் உள்ள மணல் திட்டுக்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனங்களின் உதவியுடன் ஓடையை தூர்வாரும் பணிகள் ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகளை கண்துடைப்பாக மேலோட்டமாக அள்ளி ஓடையிலேயே கொட்டி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தூத்துக்குடி குமரகிரி பகுதியில் உப்பாற்று ஓடையில் கொட்டபட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கந்தக ரசாயன கழிவுகளை 8 வாரத்தில் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்துவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com