எம்ஜிஆர் சொத்துக்களை நிர்வகிப்பவருக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சொத்துக்களை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் செல்லமேஷ்வர், அப்துல் நஸீர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆரின் சொத்துக்களை நிர்வகிக்க அரிபரந்தாமனை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்களில் ஒருவரான லதா ராஜேந்திரன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனு நேற்று நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அகர்வால் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாம் ஏற்கனவே விசாரித்து இருப்பதால், தற்போது இதை விசாரிக்கமுடியாது என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை தற்போது செல்லமேஷ்வ, அப்துல் நஸீர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என கூறப்பட்டுள்ளது.