மேட்டூர் அணையில் நீர் திறப்பு: சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
சம்பா சாகுபடிக்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன் ஆகியோர் மலர்தூவி அணையை திறந்து வைத்தனர்.
குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கமாக இருந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணை அந்த தேதியில் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது பெய்து வரும் மழையை அடுத்து தமிழகத்திற்கு உபரி தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததை அடுத்து அணையை 2ம் தேதி திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. செம்மலை, மாவட்ட ஆட்சியர் ரோகிணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சம்பா சாகுபடிக்காக அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணை திறப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ’நீர்வரத்துக்கு ஏற்ப விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்திறப்பால் 11 மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காவிரி நீர் செல்லும் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைகேற்ப நீர் திறந்துவிடப்படும். திறக்கப்பட்ட நீர் 11 நாட்களுக்குள் கடைமடையை வந்தடையும். மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்”என்றார்.
அணை நிலவரம்:-
மேட்டூர் அணை நீர்மட்டம் 94.84 அடி
நீர் இருப்பு 58.35 டிஎம்சி
நீர்வரத்து 13,928 கனஅடி
நீர் திறப்பு வினாடிக்கு 2,000 கனஅடி