மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் மேட்டூர் அணை 1934ம் ஆண்டு கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகளில் முதன்முறையாக தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் 214 கன லட்சம் மீட்டர் அளவிற்கு வண்டல் மண் படிந்திருக்கிறது. இதனால், அணையில் 15 முதல் 20 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் 1000 டிஎம்சி வரை தண்ணீர் வீணாக கடலில் கலந்திருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை அடுத்த மாதத்தில் தொடங்கவுள்ளதால், மேட்டூர் அணையில் அதிக அளவில் நீர் தேக்கி வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அணையில் தூர்வாரப்படும் வண்டல் மண், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ஒரு லட்சம் கன மீட்டர் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு ஏக்கர் நன்செய் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 25 டிராக்டர் வண்டல் மண்ணும், அதேபோல ஒரு ஏக்கர் புன்செய் நிலத்துக்கு 30 டிராக்டர் வண்டல் மண்ணும் எடுக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.