41 ஆண்டுகளுக்குப்பின் வறட்சியை சந்தித்த மேட்டூர் அணை... செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்

கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு மேலும் சரிந்துள்ள நிலையில், மேட்டூர் அணை 41 ஆண்டுகளுக்கு பின் வறட்சியை சந்தித்துள்ளது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

பரந்து விரிந்து தண்ணீர் பாய்ந்தோடுவதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் என அனைவரும் போற்றும் மேட்டூர் அணையின் தற்போதைய நிலை இதயத்தைக் கணக்கச் செய்கிறது. அணை தற்போது கரடுமுரடாகக் காட்சியளிக்கிறது. பாறைகள், ஆங்காங்கே திட்டுகள், வெடித்து பிளவுபட்ட நிலப்பரப்புகளாகவும் மேட்டூர் அணை மாறியிருக்கிறது. வழக்கமாக அக்டோபர் மாதத்தில் அணைகளில் தண்ணீர் ததும்ப காணப்படும். ஆனால் 41 ஆண்டுகளில் இல்லாத வகையில், அதாவது 1982ஆம் ஆண்டுக்கு பிறகு அக்டோபரில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 32 அடியாக குறைந்துள்ளது.

கடந்தாண்டு இதேநாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119 அடியாக இருந்தது. ஆனால் இந்தாண்டு தலைகீழாக மாறி வறண்டு காணப்படுவதால், டெல்டா விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருந்தும் தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்து விடாமல் கர்நாடக அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா தாளடி சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 400 கனஅடிக்கு கீழாகவும், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 3,000 கனஅடிக்கு கீழாகவும் சரிந்துள்ளது. மேலும் அணையில் 32 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சரிந்ததால் சில நாட்கள் மட்டுமே நீர்திறக்க முடியும் என்று கூறுகின்றனர்.

குறுவை அறுவடை பணிகள் தொடங்கியதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், வரும் நாட்களில் சமாளிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டெல்டா விவசாயிகளின் துயர்துடைக்க, காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி கர்நாடகா அரசு இறங்கிவர வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com