மேட்டுப்பாளையம்: தொடர் மழை மண்சரிவு – சீரமைப்பு பணிகள் தாமதத்தால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து
செய்தியாளர்: இரா.சரவணபாபு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு குன்னூர் வழியே உதகைக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மலை பாதையில் பெய்த கனமழை காரணமாக ஹில்குரோ - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவுகள் ஏற்பட்டன.
இதில் மரங்களும், கற்களும் சகதியோடு மண்ணும் சரிந்து தண்டவாள பாதையை மூடி சேதப்படுத்தியது. இதனால் நேற்று காலை 184 பயணிகளோடு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் புறப்பட்ட மலை ரயில், கல்லார் ரயில் நிலையம் வரை சென்ற நிலையில், மேற்கொண்டு பயணிக்க முடியாததால் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே திரும்பியது. இதையடுத்து மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், மலை ரயில் கடந்து செல்லும் இருப்பு பாதையில் சரிந்து கிடக்கும் மண், மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனால், இந்த பகுதியில் அவ்வப்போது மழை பெய்தபடி இருந்ததால் பணிகள் தாமதமானதோடு மேலும் சில இடங்களில் சிறு சிறு அளவில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால், 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நீலகிரி மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.