மெட்ரோ ரயில் நிலையத்திற்காக பறிபோகும் பள்ளி மைதானம் !
நுங்கம்பாக்கத்தில் உள்ள 90 வருட பழமையான தனியார் பள்ளியின் மைதானம் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதையின் இரண்டாம் தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நிலங்கள் கையக்கப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள 90 வருடம் பழமையான தனியார் பள்ளியின் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில் பள்ளியின் மைதானம், அரங்கம் மற்றும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான வகுப்புக் கட்டடங்கள் எடுக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பள்ளி நிர்வாகம் முறையிட்டு, அதனை மெட்ரோ நிர்வாகம் மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் முடிவுக்கு பள்ளி நிர்வாகம் சென்றுள்ளது.
பள்ளியில் படிக்கும் 2,500 மாணவர்களின் பெற்றோரை ஆதரவு குரல் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெற்றொர்களும் பள்ளி மைதானம் உள்ளிட்டவற்றை மெட்ரோ நிர்வாகம் கையகப்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, அண்ணா வளைவு இடத்தை கையப்படுத்தும் திட்டத்தை மாற்றி அமைத்தவாறு இந்த விவகாரத்திலும் முடிவெடுக்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வழக்கை சந்திக்க தயார் எனவும் கூறியுள்ளது.
பள்ளியில் தாங்கள் கையகப்படுத்தும் இடத்திற்கு கீழ் பகுதியில் பூமிக்குள் தான் மெட்ரோ ரயில் செல்லும் என்பதால், கட்டுமானப்பணிகளுக்குப் பிறகு இடங்கள் மீண்டும் பயன்படுத்த முடியும் என அந்நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் ரயில் செல்லும் தடத்திற்கு இருபுறத்திலும் ரயில் நிலையங்களுக்கான சுரங்க வழிகள் அமைக்கப்படும் என்பதால் அதற்கான இடங்கள் மற்றும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகம் கூறும்போது, பழமை வாய்ந்த தங்கள் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் சிறந்த முறையில் விளையாட்டு பயில்வதாகவும், இந்த நிலையத்தால் அவர்களின் விளையாட்டு மைதானம் முற்றிலும் முடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.