நாளை மறுநாள் உருவாகும் ’மோன்தா’ புயல்.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தின் முதல் புயல் வரும் 27ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெறக்கூடும் என்றும், பின்னர், மேலும் வலுவடைந்து, புயலாக உருவாகும் என கூறப்பட்டது.
மேலும் புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு MONTHA என பெயரிடப்பட உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது மோன்தா புயல் நாளை மறுநாள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது..
சமீபத்திய அப்டேட்டின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதாகவும், அது நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, நாளை மறுநாள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் மோன்தா புயல் குறித்து கூறியிருக்கும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர், அக்டோபர் 27ம் தேதி உருவாக இருக்கும் மோன்தா புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டணம் - விசாகப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகில் அக்டோபர் 28-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் அக்.27 மற்றும் 28ம் தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

