கருணை கொலை செய்துவிடுங்கள்: சொத்தை அபகரித்துக் கொண்டதாக மகன் மீது பெற்றோர் புகார்

கருணை கொலை செய்துவிடுங்கள்: சொத்தை அபகரித்துக் கொண்டதாக மகன் மீது பெற்றோர் புகார்
கருணை கொலை செய்துவிடுங்கள்: சொத்தை அபகரித்துக் கொண்டதாக மகன் மீது பெற்றோர் புகார்

மயிலாடுதுறையில் மகன்கள் சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக குற்றம்சாட்டி முதியவர் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கருணை கொலை செய்யும்படி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தில் முதியவர் தங்கசாமி (86) அவரது மனைவி சாரதாம்பாளுடன் (75) வசித்து வருகிறார். இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு இவருக்குச் சொந்தமான நிலத்தை தனது நான்கு மகன்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்துவிட்டு இவருக்கும் இவரது மனைவிக்கும் பூர்வீக வீடு மற்றும் 125 சென்ட் நிலம் ஆகியவற்றை ஒதுக்கி இருந்தார்.

இந்நிலையில் மனைவி உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது சீர்காழி அரசு மருத்துவமனையில் மருந்தாளராக வேலை பார்த்து வரும் மூத்த மகன் உத்திராபதி மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் உடல்நலம் தேறிவந்த இவரது மனைவியிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாகத்தையும் உத்திராபதி தனது மகன்கள் பேருக்கு எழுதிக் கொண்டதாக தங்கச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் குடியிருந்த வீட்டை அபகரித்துக் கொண்டு தாய், தந்தையர் இருவரையும் விரட்டி விட்டதாகவும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி முதியவர் தங்கசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது சொத்தை மீட்டு தர வேண்டும், இல்லையென்றால் தங்களை கருணை கொலை செய்து விடுங்கள் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து மனுவினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் மகாபாரதி இருதரப்பையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தங்கசாமியின் மூத்த மருமகள் ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் எனது மாமனார், மாமியார் தங்களிடம் இருந்தபோது பேரன்கள் பெயரில் சொத்தை எழுதிகொடுத்தனர். மற்றொரு மருமகளின் பேச்சை கேட்டுக்கொண்டு தற்போது சொத்தை திருப்பிக் கேட்கிறார்கள்

எனது கணவர் மாதந்தோறும் பெற்றோருக்கு ரூ.4 ஆயிரம் பணமும் ஆண்டிற்கு 20 மூட்டை நெல் கொடுப்பதாகவும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஒரே பிரச்னைக்கு இருதரப்பினர் மனு கொடுத்தநிலையில் உண்மைநிலை குறித்து உரிய விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com