மறு வாக்கு எண்ணிக்கை கோரி வேட்பாளரின் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி!
பெரம்பலூர் அருகே வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள் மறு வாக்கு எண்ணிகை கேட்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்புலியூர் சிலோன் காலணியில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளைச்சாமி என்பவர் போட்டியிட்டார். சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட இவர் 196 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற செல்வராஜ் 197 வாக்குகள் பெற்றார்.
இந்நிலையில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வெள்ளைச்சாமி மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்த நிலையில் வேட்பாளரின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் திடிரென தீக்குளிக்க முயன்றனர். அதிகாரிகள் முன்னிலையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.