ஜீயரின் சோடா பாட்டில் பேச்சு: ட்விட்டரில் மீம்ஸ் மழை

ஜீயரின் சோடா பாட்டில் பேச்சு: ட்விட்டரில் மீம்ஸ் மழை
ஜீயரின் சோடா பாட்டில் பேச்சு: ட்விட்டரில் மீம்ஸ் மழை

ஜீயரின் சோடா பாட்டில் பேச்சு தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

தனியார் பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.  இந்த விவகாரத்தில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, ஜீயர் சடகோப ராமானுஜர் ஆண்டாள் கோவிலில் உண்ணாவிரதம் இருந்தார். 

இதனையடுத்து, வைரமுத்துவை கண்டித்து நாமக்கலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜீயர் சடகோப ராமானுஜர், 
பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். மேலும், “கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால் செய்ய மாட்டோம். ஆனால், இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும், இனி அமைதியாக போகமாட்டோம்” என்று கூறினார்.

சடகோப ராமானுஜரின் சோடா பாட்டில் பேச்சு குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. வின்னர் படத்தில் வடிவேலு மூன்று சக்கர வாகனத்தில் வருவதைபோல் ஜீயரை சித்தரித்த மீம்ஸ் அதிகம் பகிரப்பட்டது. நானும் ரவுடி தான் என்ற வடிவேலுகின் காமெடி, சிவாஜி படத்தில் ஆதிகேசவன்னா யாருனு நெனச்ச என்ற வசனத்தையும் சித்தரித்து சிலர் மீம்ஸ்கள் பதிவிட்டுள்ளனர்.

மேலும், ஜீயருக்கு ஆதரவாக பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கலாய்த்தும் மீம்ஸ்கள் பகிரப்படுகிறது. ஜீயரின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “நல்ல அர்த்தத்தில் ஜீயர் பேசியிருப்பார். அருந்திவிட்டு காலியானால் தூக்கி வீசுவது பற்றி பேசியிருப்பார்” என்று விளக்கம் அளித்து இருந்தார்.

அதேபோல், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் ஜீயர் சடகோப ராமானுஜர் புகார் அளித்துள்ளார். ஜீயர் கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். இதவை குறித்தும் பலர் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com