மதுரை: நாயை விழுங்கிவிட்டு தவித்த 7 அடி மலைப்பாம்பு - மனிதனை விழுங்கிவிட்டதாக பரவிய வதந்தி
மதுரையில் மேலூர் அருகே 7அடி நீள மலைப்பாம்பொன்று, நாயை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பு, மனிதனை விழுங்கியதாக வதந்தியும் பரவியதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருந்தனர். இந்நிலையில் அந்த 7 அடி நீள மலைப்பாம்பினை தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சிகுபட்ட தேனக்குடிபட்டியில் இறை தேடி திரிந்த சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் சுற்றிதிரிந்த நாயை லாவகமாக உண்டுள்ளது. நாயை விழுங்கியதால் மலைப்பாம்புவினால் நகர முடியாமல் போனதால், அவ்விடத்தை விட்டு வெளியே நகர முடியாமல் அது தவித்தது. இதனை கண்ட ஆடு மேய்த்தவர்கள் உடனடியாக கொட்டாம்பட்டி தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த நிலைய அலுவலர் வீரணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பினை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த முயற்சியில், விழுங்கிய நாயை மலைப்பாம்பு வெளியே உமிழ்ந்தது. பின்னர் மலைப்பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது. அது பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் பட்டுள்ளது. இறை தேடித்தான் மலைப்பாம்பு நாயை விழுங்கியதாகவும், இதனால் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வன உயிரினங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.