மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்!

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மீகவாதியமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) மாலை காலமானார்.
பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்புதிய தலைமுறை

திண்டிவனம் அருகே, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனராக இருந்தவர், பங்காரு அடிகளார். இவர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிதுகாலமாக சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே மாரடைப்பு காரணமாக இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.

ஆதிபராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் இருந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டார். இவர், பெண்கள் எந்த நாளிலும் கருவறைக்கு பூஜைகள் செய்யலாம் என ஆன்மிகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர். அதோடு ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் சக்தி வழிபாட்டுத்தலங்களை உருவாக்கியவர் பங்காரு அடிகளார். அவரின் ஆன்மிக சேவையைப் பாராட்டி 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில், "கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது இரங்கல் செய்தியில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய அன்னை ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன்.

ஓம் ஷாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் @BJP4Tamilnadu சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்து முக்தியடந்த அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் அம்மன் வழங்கட்டும்.

ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com