\
Mekedatu Dam Row: Anbumani Objects to TN-Karnataka Talks
விஜய் - அன்புமணி - டி.கே. சிவகுமார்Pt web

மேகதாது | ”கர்நாடகாவுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை கூடாது” - அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, ஆகஸ்ட் மாதம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
Published on

கர்நாடகா - தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. இந்தசூழலில்தான், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாகவும் நிறைவேறியிருந்தது.

அதேசமயம், அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்
மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்web

ஆனால், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தசூழலில் தான், மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் இன்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், கர்நாடக அரசுடனான இந்தச் சந்திப்பில், தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாகத் திறக்க வலியுறுத்தப்படும் என்றும், தமிழகத்தின் விவசாய உரிமைகளைப் பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தசூழலில் தான், கர்நாடக முதல்வருடன் தமிழக முதல்வர் விஜய் பேச்சு வார்த்தை நடத்துவது தவறான முன்னுதாரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ”தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் கூறிய தகவலின்படி, ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள மேகதாது அணை தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மையாக இருந்தால் அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். 

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்கோப்பு படம்

மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதற்கு சாதகமான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. மேகதாது அணையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளாத ஒரு திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. எனவே எந்தச் சூழலிலும் கர்நாடக அரசுடன் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் அது தமிழ்நாட்டின் நலனுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு அந்தக் கூட்டத்தை நடத்தவில்லை. இது ஒரு தவெக அரசியல் கட்சியின் பிரச்சினை அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமைப் பிரச்சினை. எனவே அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு ஒருமனதாக முடிவு செய்ய வேண்டும். சட்டரீதியான போராட்டத்தையும் அரசியல் ரீதியான அழுத்தத்தையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டும்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட அனுமதிக்க முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Mekedatu Dam Row: Anbumani Objects to TN-Karnataka Talks
காவிரி நதிநீர் விவகாரம்.. கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com