
தமிழ்நாட்டில் முதல் முறையாக 91 வயதில் முனைவர் பட்டம் பெற்று முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திருவாரூரை சேர்ந்த 91 வயது முதியவர் ஒருவர் முனைவர் பட்டம் பெற்றார். 1928ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தின் கூத்தாநல்லூரில் மிஷ்கின் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை தனது கிராமத்தில் முடித்தார். அதன்பின்னர் இவர் 1950ஆம் ஆண்டு லயோலா கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் 1958ஆம் ஆண்டு சி.ஏ படித்து முடித்தார். அதன்பிறகு இவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது கல்லூரி படிப்பை முடித்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கி காசோலை திரும்ப வருதல், அதில் நடைபெறும் மோசடி குறித்து இவர் ஆய்வு செய்ய திட்டமிட்டார். இதற்காக இவர் வங்கி காசோலை புகார்கள், பிரச்னை தொடர்பாக 400 வழக்குகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்த இவர் நேற்று முனைவர் பட்டத்தை பெற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதலாவதாக இவர் இந்தப் பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.