முகினுடன் இருக்கும் வீடியோக்களை பரப்பச் சொல்லும் மீரா மிதுன் - வெளியான புது ஆடியோ!
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுனின் புதிய ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது வெளியான அவரது ஆடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய ஆடியோ மீராமிதுன் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராய் கலந்து கொண்டவர் மீரா மிதுன். சக போட்டியாளர்களுடன் அவர் நடந்து கொண்ட விதம் நிகழ்ச்சியில் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான அவரது மிரட்டல் ஆடியோக்கள் இன்னும் அதிகமாய் பேசப்பட்டது. குறிப்பாக, மாடலிங்கில் இருந்தது முதல் தனக்குப் பிரச்னையாக இருப்பதாகக் கூறிய, ஜோ மைக்கேல் என்பவரை 'ஆள வச்சித் தூக்கு' என மீரா மிதுன் பேசியது திடுக்கிட வைத்தது.
மீரா மிதுன் ஜூலை 27ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு, போட்டோ ஷூட், திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், மீரா மிதுன் பேசும்படியான ஆடியோ ஓன்று வெளியாகியிருக்கிறது. அதில், தான் பிக்பாஸ் போட்டியாளர் முகின் ராவுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும் எனவும், வேலை முடிந்ததும் அதற்கான பணம் வழங்கப்படும் எனவும் பேசும் வகையில் அந்த ஆடியோ அமைந்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3-ஆம் பாகம் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், முகின் தான் வெற்றியாளராவார் எனும் ஊகங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது, மீரா ஏன் அவருடன் இருக்கும் வீடியோக்களை பரப்பச் சொல்கிறார், முகினின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா எனும் வகையிலான கருத்துகளும் அந்த ஆடியோவின் அடிப்படையில் பரவத் தொடங்கியிருக்கின்றன.