மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்கக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் சுயமருத்துவத்துக்கு வந்து மருந்து கேட்பவர்களுக்கு, தர வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்ட பிறகு, மருத்துவர் பரிந்துரைத்த சீட்டு இல்லாமல் சுயமருத்துவத்துக்கு வந்து மருந்து கேட்பவர்களுக்கு, தர வேண்டாம் என்று கூறினார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர சிகிச்சை பிரிவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர், தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது, காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காய்ச்சல் வந்தவுடன் மருந்தகங்களில் மருந்து வாங்கிச் சாப்பிடாமல், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். வரும் செவ்வாய்க்கிழமையன்று மருந்தக உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் மருந்து சீட்டு இல்லாமல் வரும் பொதுமக்களுக்கு மருந்து வழங்கக்கூடாது என உத்தரவிட உள்ளோம். மீறினால் மருந்தகங்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.