மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை: விசாரணையில் சிக்கியது கடிதம்
மதுரையில், மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த உதயராஜ் என்பவர், மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். தனது நண்பர்களுடன், மதிச்சியம் முனிசிபல் காலனியில் ஒரு அறையில் தங்கியிருந்த இவர், நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிகிறது.
மாணவரின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் உதயராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் கடிதம் காவல்துறை வசம் கிடைத்துள்ளது. அதில், அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை மேற்கொள்வதாக எழுதப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.