“தேவையின்றி வெளியே வராதீர்கள்”- புயலின் போது பின்பற்றவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

மிக்ஜாம் புயல் நெருங்கிக்கொண்டே இருக்கும் சூழலில், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பார்ப்போம்.
புயல்
புயல்pt web

“டிசம்பர் 5 அம் தேதி முற்பகலில் புயல் கரையை கடக்கக்கூடும்”

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்திக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிசம்பர் 2 காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 440 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கு 580 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே தென்கிழக்கு 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 3 புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4 ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5 அம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும்” என தெரிவித்தார்.

நெருங்கிக்கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்... கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை..

இந்நிலையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை சிலவற்றை வெளியிட்டுள்ளது

1. புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம், என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேவையின்றி வெளியில் வரவேண்டாம்

2.கனமழை அல்லது இடியுடன் கூடிய மழையின் போது வெளியே செல்வதை தவிர்க்கவும். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தால், பொது போக்குவரத்து அல்லது நம்பகமான வாகனத்தைப் பயன்படுத்தவும். இடி, புயலின் போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்

3.மின்கம்பங்கள், கம்பிகள், உலோகப் பொருள்கள் அல்லது மின்னலை ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும். விழுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும், அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

மின் கம்பிகளை தொட வேண்டாம்

4.பொதுமக்கள் சாலையில் செல்லும்போது மிகவும் கவனமாக செல்லவேண்டும்

5.வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும்.

6.வாகனங்களை ஓட்டும் முன்பே பிரேக்குகளை சரிபார்க்கவும்.

7.தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.

8.வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.

9.வாகனங்களில் செல்லும் போது குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றவும். பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்.

10.மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

11.பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

12.வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.

13.சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.

14.அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100ஐ அழைக்கவும்.

15.சென்னை பெருநகர காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com