கட்சியிலிருந்து விலகி புது இயக்கம் தொடங்குகிறார் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன்

கட்சியிலிருந்து விலகி புது இயக்கம் தொடங்குகிறார் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன்
கட்சியிலிருந்து விலகி புது இயக்கம் தொடங்குகிறார் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன்

மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மதிமுகவில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இருந்தால் தன்னால் தான் நினைத்ததை செய்யமுடியவில்லை எனக்கூறி, தான் நினைப்பதை செய்வதற்காக தனியொரு இயக்கம் தொடங்குவதாகவும் ஆகவே அங்கிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மதிமுக மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து இன்று ஈஸ்வரன் விலகுவதாக தெரிவித்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பவை: “கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். மக்களின் பிரச்னைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன். கட்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், இளைஞர் அணி செயலாளர் என்று பல பொறுப்புகளில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வந்துள்ளேன். அவை அனைத்தும் இயக்க தோழர்கள் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை தந்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

எனது பொதுவாழ்வின் மூலம் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை. அரசியலை எனது சுய லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை என் கொள்கையாகவே வைத்துள்ளேன். கடந்த 28 ஆண்டுகள் எனக்கு எந்த பதவியும் கிடைக்காவிட்டாலும், ஏராளமான பொருள் இழப்புகளை சந்தித்திருந்தாலும், மக்களுக்காக பணியாற்றி பல வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மனநிறைவையே தந்துள்ளது. எதுவும் வீணாகிவிடவில்லை. ஆனாலும் அரசியலிலும், சமூகத்திலும் நடக்கின்ற பல நிகழ்வுகள் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்கிறது. இதனை மாற்றவேண்டும் அல்லது தீர்வுகாண வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு அரசியல் இயக்கத்தில் இருந்து கொண்டு அதனை செய்ய இயலவில்லை. பலமுறை பல சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது.

இயக்கத்தின் பொதுவான மனநிலைக்கும் எனது செயல்பாடுகளுக்கும் முரண்பாடுகள் வரத்தொடங்கும் போது நான் இங்கு இயங்குவது இயக்கத்திற்கும் நல்லதல்ல, எனக்கும் நல்லதல்ல. எனது வாழ்நாளில் என் மனதில் நினைக்கும் பல அரசியல், சமூக மாற்றங்களை உருவாக்க நான் சிறு முயற்சியாவது மேற்கொள்ள வேண்டும் என கருதுகிறேன். எனது சட்டப்போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் எனக்கு சிறு அமைப்பொன்று தேவைப்படுகிறது. அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல. ஆனால் அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும்.

நான் நேசிக்கும் தலைவர் வைகோ அவர்கள் என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது.அதை என்னால் வெட்ட இயலவில்லை. எந்த காரணம் சொல்லியும் என்னால் இவ்விஷயத்தில் சமாதானப்படுத்திக்கொள்ள இயலவில்லை. என் தலைவரா அவர் விதைத்த கொள்கையா என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது. என்ன செய்வேன் நான்?

அரசியலில் எனக்கு நேர்மையையும் கண்ணியத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் கற்றுத்தந்த எனது பாசமிகு பொதுச்செயலாளர் அவர்களுக்கும், எனக்கு ஒத்துழைப்பு தந்து எனது போராட்டத்தை வெற்றியடைய செய்தும், என்மீது அன்பு செலுத்திய எனது சக தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது என்று எதை பொதுச்செயலாளர் சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன். ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது. ஆனால் இன்று, கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com