7 வருட வழக்கில் சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை - திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி விமான நிலையத்திற்கு 2018-ஆம் ஆண்டு மே 19-ம் நாள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார்.அப்போது, விமான நிலையத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர், வைகோ கார் சென்ற பிறகு கூச்சலிட்டனர். இதனை மதிமுகவினர் தட்டிக் கேட்க முற்பட்டபோது, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் கொடிக்கம்பங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்தப் பிரச்சனை தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இருதரப்பினரின் மோதலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, இரு கட்சியினர் மீதும் விமான நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு 2-ஆவது கூடுதல் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.கடந்த 7 வருடங்களாக நடந்த வழக்கு விசாரணை முடிவடைந்து திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது .
இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜூலை 16ஆம் தேதி நேரில் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்துள்ளார்.