வைகோவின் போர்ப்படைத் தளபதி.. மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி உயிரிழப்பு

மதிமுகவின் முன்னாள் பொருளாளரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி மரணமடைந்திருக்கிறார்.
MP Ganesha murthi
MP Ganesha murthipt desk

மதிமுகவின் முன்னாள் பொருளாளரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி இன்று காலை உயிரிழந்தார். தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வைகோ, மதிமுகவை உருவாக்கியபோது, அன்று அவருடன் இருந்த பல தலைவர்கள், இன்று கட்சியை விட்டுப் பிரிந்து பல்வேறு கட்சிக்குப் போயிருந்தாலும், அப்போதிருந்து தற்போதுவரை அவர் கூடவே இருந்த போர்ப்படைத் தளபதியான கணேசமூர்த்தி மரணமடைந்திருப்பது, அதுவும் தற்கொலையால் உயிரிழந்திருப்பது என்பது கட்சி வட்டாரத்தில் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எம்பி கணேசமூர்த்தி
எம்பி கணேசமூர்த்திpt web

பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களில் மிகத் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த கணேசமூர்த்தி மாணவப்பருவத்திலேயே திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டவர். அந்த ஈடுபாட்டின் காரணமாக, ஏராளமான பணிகளை சிறப்பாக செய்ததன்மூலம் மாநில மாணவரணி துணை அமைப்பாளர், ஈரோடு மாவட்டச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்தார். 1993-ல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக வெளியேறிய ஒன்பது மாவட்டச் செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். அப்போது தொடங்கி மதிமுக ஈரோடு மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தார். தொடர்ந்து, 2016-2019 வரை மதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார் கணேசமூர்த்தி. மிகத் தீவிரமான ஈழ ஆதரவாளராகவும் திகழ்ந்தவர் கணேசமூர்த்தி.

தேர்தல் அரசியல் என்று பார்த்தால், 1998-ல் திமுக சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். தொடர்ந்து, 1998 தேர்தல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக சார்பில் பழனி தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். 2006 சட்டமன்றத் தேர்தலில் வெள்ளக்கோவிலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பியானார். 2014 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியிருந்தாலும், 2019 நடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எம்.பியானார். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது; துரை வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

எம்.பி. கணேசமூர்த்தி
எம்.பி. கணேசமூர்த்திபுதிய தலைமுறை

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) கணேச மூர்த்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த கணேசமூர்த்தியை வைகோவும், அவருடைய மகன் துரை வைகோவும் நேரில் சென்று பார்த்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதால், அதில் கணேசமூர்த்திக்கு சீட் வழங்கி, முதல்வர் ஸ்டாலினிடம் பேசி நல்ல பொறுப்பும் வாங்கித் தரலாம் என நான் முடிவு செய்திருந்தேன்” என்றார்.

இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்த எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 28) அதிகாலை 05.05 மணிக்கு உயிரிழந்தார். கடந்த 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், மதிமுகவிற்காக எப்போதும் முன் நின்றவர் உயிரிழந்துள்ள செய்தி அவரது குடும்பத்தாரையும், கட்சி நிர்வாகிகளையும் தீவிர சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com