
மதிமுக அவைத் தலைவர் துரைசாமி வைகோவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், தங்களின் சமீபகால நடவடிக்கைகளால், கட்சிக்கும், தங்களுக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு, தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை, கட்சியினர் அறிந்துள்ளனர்.
அதனால், தமிழகம் முழுவதும் பழைய உறுப்பினர்கள் கூட, தங்களை புதுப்பித்துக் கொள்ள முன்வரவில்லை. புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில், நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டு ஆர்வம் குறைந்துள்ளது. ம.தி.மு.கவின் நிலைமை எப்படி உள்ளது என்பதை, தங்களின் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்.
கடந்த 30 ஆண்டுகளாக, கொங்கு மண்டலம், ம.தி.மு.கவின் கோட்டை என பேசி வருகிறீர்கள். ஆனால், கொங்கு மண்டலத்தில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும், மாநகர மாவட்ட செயலர் தேர்தலை நடத்தி முடித்து விட்டீர்கள் என சொல்லப்படுகிறது.
திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வார்டுகளிலும், போலி பெயர்களில் உறுப்பினர்களை பதிவு செய்து, தேர்தல்களை நடத்தி முடித்துள்ளீர்கள். கொங்கு மண்டலத்தில் ம.தி.மு.கவின் நிலை இதுவென்றால், வேறு மாவட்டங்களை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக, உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய்க் கட்சியான தி.மு.கவில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்