முள்ளிவாய்க்கால் விவகாரம்: இன்று இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுக சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணை தூதகரத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெறுகிறது.
2019ல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இலங்கை அரசு, இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது. இதனையடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு, அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இலங்கை அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் மே 17 உள்ளிட்ட இயக்கங்களும் பங்கேற்கின்றன.
இதனிடையே கொழும்புவில் இன்று நடைபெறவிருக்கும் இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு குறித்து பேசவிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறந்தவர்களை நினைவு கூறுவதற்கும் அவர்களது மதக்கடமைகளை நிறைவேற்றுவதற்கும் நினைவிடம் மிக மிக அவசியமானது என்றும் கூறினார். இதுபோன்ற செயல்பாடுகள் அரசியல் உள்நோக்கத்திற்காகவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.