கோவையில் துப்புரவுப் பணியாளரான எம்பிஏ பட்டதாரி!!
நன்கு படித்து கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவு. ஆனால், எம்பிஏ படித்த இளைஞர் ஒருவர், கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் குப்பைகளை சேகரிப்பது, குப்பைகளை வண்டியில் ஏற்றுவது என்று சாதாரணமாக வேலை பார்க்கும் சையத் முக்தார் அகமதுக்கு 35 வயதாகிறது. கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த இவர் எம்பிஏ பட்டதாரி என்பதோடு, ஹைதராபாத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மாதம் 35 ஆயிரம் ரூபாய் ஊதியம் வாங்கிக் கொண்டிருந்தவர். அந்த வேலையை விட்டுவிட்டு கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியாளராக அண்மையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அரசு வேலையில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு இருப்பதாலும், பணி அழுத்தமின்றி வேலை செய்யலாம் என்றும் கூறும் சையது, துப்புரவுப் பணியை செய்வதில் எந்த வருத்தமும், கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
முன்பு பார்த்த வேலையை விட சம்பளம் மிகக்குறைவு என்றாலும் துப்புரவுப் பணியால் சமூகத்திற்கு சேவை செய்யும் மனநிறைவு கிடைப்பதாகவும் கூறுகிறார் சையது. கோவை மாநகராட்சியில் அண்மையில் துப்புரவு பணியாளர்களாக பணிநியமன ஆணை வழங்கப்பட்ட 321 பேரில், எம்எஸ்சி, எம்பிஏ பட்டதாரிகளும் அடங்குவர்.