தமிழ்நாட்டில் மயோனைஸ்க்கு தடை.. அரசு விடுத்த எச்சரிக்கை... என்ன காரணம்?
சமீப காலமாக பலரும் அதிகம் விரும்பி சாப்பிடும் சைடிஸ் ஆக மயோனைஸ் இருக்கிறது. பாஸ்ட் புட், மட்டன், சிக்கன், சவர்மா, பிரெட் ஆம்லெட் என்று பல உணவு வகைகளுக்கு மயோனைஸ் சேர்க்கப்படுகிறது. எடுத்துக் கொள்ளும் மெயின் டிஸ்-ஐ தொட்டுக் கொள்ளும் சைடிஸ் ஆகவே மயோனைஸ் இருக்கிறது.
இந்த நிலையில் தான் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்-க்கு ஓராண்டு தடைவிதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டு மயோனைஸ்க்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மயோனைஸை உண்பதால் இரைப்பை குடல் தொற்று உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநிலம் முழுவதும் மயோனைஸ் உற்பத்தி செய்வது. சேமித்து வைத்தல், வினியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வகையில் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் பொது சுகாதாரத்திற்கு மயோனைஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அரசு சார்பில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழிலில் ஏப்ரல் 8ம் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மீறுவோருக்கும் அபராதம் விதிப்பது. உரிமத்தை ரத்து செய்வது, தேவையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு நுகர்வோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.