
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மூவலூர் மகாதானபுரம் கூட்டுறவு நகர் பகுதியில் சேர்ந்தவர் முருகேசன், அவருடைய மகள் ஹரிணி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மயிலாடுதுறை கூறைநாடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் தீபன் (25) என்பவர், ரயிலடி பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஹரிணி, தீபன் கடைக்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய செல்லும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் பழக்கம் காதலாக மாறிய நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்வீட்டார் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என, கடந்த 24 ஆம் தேதி இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடலூர் மாவட்டத்திற்கு சென்று அங்கே பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில் மகளைக் காணவில்லை என ஹரிணி பெற்றோர் தேடி விசாரித்துள்ளனர். அப்போது விசயம் தெரியவரவே மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவருடன், ஹரிணி சென்றதால் ஆத்திரமடைந்த பெற்றோர் குத்தாலம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட குத்தாலம் போலீசார், தீபன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த தீபன் ஹரினி ஜோடியினர் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர் உதவியுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
எஸ்.பி நிஷா விடுமுறையில் இருப்பதால், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ் விசாரணை மேற்கொண்டார், திருமண வயது குறித்து விசாரித்தபோது இருவரும் படிப்பு சான்றிதழ்களை அளித்ததுடன், திருமணபதிவு சான்றிதழையும் அளித்தனர். அனைத்தையும் போலீசார் சரிபார்த்தபோது, காதல் ஜோடி தங்கள் சுய விருப்பத்தின்பேரில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
ஹரிணி தன் காதல் கணவருடன் செல்ல விரும்பியதால், போலீஸ் பாதுகாப்புடன் அவரை தீபனுடன் அனுப்பி வைத்தனர். தீபன் ஹரினி ஜோடியினர் எஸ்பி அலுவலகத்திலிருந்து காரில் செல்லும்போது பெண்ணின் பெற்றோர் ஆவேசப்பட்டு 2 கி.மீ தூரம்வரை அவர்களை துரத்திப் பார்த்து திரும்பிச் சென்றனர்.