“டாஸ்மாக் மதுவில் சயனைடு கலந்து சகோதரர்களே கொலை செய்தது உறுதியானது”-மயிலாடுதுறை ஆட்சியர் பகீர் தகவல்

டாஸ்மாக் மதுகுடித்து உயிரிழந்த விவகாரத்தில் சயனைட் கலக்கப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளதாகவும், தற்கொலை அல்ல கொலை என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
சயனைடு கலந்து கொலை
சயனைடு கலந்து கொலைPT

மயிலாடுதுறை மாவட்டம பெரம்பூர் காவல் சரகம் தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன்(55). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லுபட்டறைவைத்து நடத்திவந்துள்ளார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி(55) என்பவர் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மதுவாங்கி வந்து குடித்தபோது திடீரென்று மயங்கிவிழுந்துள்ளனர். மயங்கி விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பூர் போலீசார் மயங்கி விழுந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, பிரிக்கப்படாத ஒரு குவாட்டர் மதுபாட்டிலும், பாதிக்குமேல் குடித்த மதுபாட்டிலும் இருந்ததை கைப்பற்றி மதுபாட்டில்களை பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில் அரசு டாஸ்மாக் மதுவாங்கி குடித்ததால் தான் இருவரும் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். பெரம்பூர் போலீசார் சந்தேகமரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பழனிகுருநாதன், பூராசாமி இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மதுவில் சயனைடு கலந்தது அம்பலம்!

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, டாஸ்மாக் மதுபானத்தில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்ததாக முதல்கட்ட விசாரணைக்கு பிறகு தெரிவித்தார். அதனையடுத்து முன்விரோதம் காரணமாக யாராவது மதுவில் கலந்துகொடுத்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சயனைடு கலந்த மதுவால் உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து, இறந்தவர்கள் டாஸ்மாக் மதுகுடித்து இறந்த சம்பவத்தை திசைதிருப்புவதற்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமல்லாமல் தவறான செய்தியை பரப்புவதாக கூறி மயிலாடுதுறை-திருவாரூர் மெயின்ரோட்டில் மதியம் 2 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சயனைடு கலந்து கொலை
சயனைடு கலந்து கொலைPT

இதனைத்தொடர்ந்து டிஎஸ்பி சஞ்ஜீவ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் மதுகுடித்ததால் இறந்த 2 பேரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும், கள்ளச்சந்ததையில் மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். மதுவால் இறந்திருந்தால் அதற்கான இழப்பீடு பெற்றுதர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

ஒரு லட்சம் நிவாரண நிதி அளித்த பூம்புகார் எம். எல்.ஏ நிவேதா முருகன்!

சாலை மறியல் என விவகாரம் பெரியதாக மாறியதை அடுத்து, பூம்புகார் எம்.எல்.ஏ.நிவேதாமுருகன் தனது சொந்த நிதியில் இருந்து இறந்தவர்கள் 2 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரண நிதியை, தகவல்தொழில்ப அணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார். அதனையடுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் இறந்த பழனிகுருநாதனின் உறவினர்கள் மனோகரன், பாஸ்கரன் ஆகிய 2 பேரை போலீசார் விசாரணைக்காக சம்பவ இடத்தில் இருந்து அழைத்துசென்றதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

சயனைடு கலந்து கொலை என மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் குடித்து உயிரிழந்த இருவரும் சயனைடு கலந்து கொடுத்து தான் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “டாஸ்மாக் மதுகுடித்து உயிரிழந்த இருவரும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சொத்து தகராறு காரணமாக தான் அவர்கள் சயனைடு கலந்து கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனையின் போது ரத்தத்தில் சயனைடு விஷம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com