Mayiladuthurai assembly constituency updates
மயிலாடுதுறைx page

மயிலாடுதுறை தொகுதி | மும்முனைப் போட்டி.. முந்தப்போவது யார்?

இங்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் சமபலத்துடன் உள்ளன. வன்னியர், பட்டியலின மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் இத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றனர்.
Published on

தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக உருவெடுத்த மயிலாடுதுறை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகக் கள நிலவரங்கள் குறித்து பார்க்கலாம்.

காவிரி ஆறு வங்கக்கடலில் சங்கமிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார், உலகப் புகழ்பெற்ற தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் பழமை வாய்ந்த சைவ ஆதீனங்களைக் கொண்ட இந்த மாவட்டம், ஆன்மிகம் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. மாவட்டத்தின் முதன்மைத் தொகுதியான மயிலாடுதுறையில் தற்போது இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எஸ்.ராஜகுமார் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், இங்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் சமபலத்துடன் உள்ளன. வன்னியர், பட்டியலின மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் இத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றனர். மூடப்பட்ட அரசு சர்க்கரை ஆலை மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டக் குளறுபடிகள் இத்தொகுதி மக்களின் நீண்டகாலப் புகாராக நீடிக்கிறது.

Mayiladuthurai assembly constituency updates
திமுக - அதிமுக, ஸ்டாலின் - எடப்பாடி கே.பழனிசாமிweb

அடுத்ததாக, விவசாயமும் மீன்பிடித் தொழிலும் ஒருசேரக் காணப்படும் சீர்காழி தனித் தொகுதியைப் பொறுத்தவரை, இரண்டு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த மு.பன்னீர்செல்வம் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர். பட்டியலின மற்றும் வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழும் இத்தொகுதியில், நிலத்தடி நீர் உப்பாவதைத் தடுக்கக் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகாலக் கோரிக்கையாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியான பூம்புகாரில் இரண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுகவின் நிவேதா முருகன், இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

Mayiladuthurai assembly constituency updates
சீர்காழிஎக்ஸ் தளம்

வன்னியர், பட்டியலின மற்றும் மீனவச் சமூகத்தினர் அதிக ஆதிக்கம் செலுத்தும் இத்தொகுதியில், கடந்த முறை நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வருகை மற்றும் இளைஞர்களின் வாக்கு மாற்றம் ஆகியவை வரும் தேர்தலில் மும்முனைப் போட்டியை உருவாக்கி, பிரதான கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், விவசாயப் பிரச்னைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய அரசியல் கட்சிகளின் வருகை ஆகியவையே மயிலாடுதுறை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போகும் முக்கியக் காரணிகளாக உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com