மயிலாடுதுறை: கனமழையால் 30,000 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு; காப்பீடு கோரும் விவசாயிகள்!
செய்தியாளர் : ஆர்.மோகன்
மயிலாடுதுறையில் கனமழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஆய்வு செய்து முழு காப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா பயிர் நீரில்
சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பருவ மழையில் தப்பிய பயிர், புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இதனால் கூடுதல் செலவு செய்து மருந்துகள் அடித்து பயிர்களை காப்பாற்றினர் விவசாயிகள்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான பயிர் அடியோடு நீரில் மூழ்கியுள்ளன. வடிகால்கள் முறையாக தூர்வாரப்படாததால், தண்ணீர் வடிவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதே போல கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலும் அறுவடைக்கு
தயாராக இருந்த 15ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.