தகாத உறவிற்காக கணவனை கொன்ற மனைவி: நாடகமும் கொடூரமும் அம்பலம்!
மயிலாடுதுறை அருகே கணவனை, தகாத உறவு ஏற்பட்டவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பொன்செய் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (38). மின் ஊழியராகப் பணியாற்றி வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த ரேகா (30) என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அறிவழகன் சிறிது காலத்திற்கு வெளியூரில் தங்கி வேலை பார்த்துள்ளார். அண்மையில் வீடு திரும்பிய அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அறிவழகன் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதையடுத்து உறவினர்களிடம் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக, ரேகா கூறியுள்ளார்.
தகவலறிந்து வந்து அறிவழகன் உடலை பார்த்த உறவினர்கள், அவரது உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்துள்ளனர். இதற்கிடையே காவல்துறையினருக்கு தகவல் தெரிந்து, அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது அறிவழகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினரிடம் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். அறிவழகனின் பிரதே பரிசோதனையில் அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டதும், கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து அறிவழகன் மனைவி ரேகாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பல கிடுக்கிப்பிடி கேள்விகளை அடுக்கினர். காவல்துறையினரின் விசாரணையில் தப்பிக்க முடியாத ரேகா, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன் பல திடுக்கிடும் தகவல்களையும் அவர் கூறினார். தனது கணவர் வேலைக்காக வெளியூர் சென்றபோது, தன் வீட்டிற்கு அருகாமையில் வேலை செய்த பெயிண்டர் ராஜசேகருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்தப் பழக்கம் பின்னர் தகாத உறவாக மாறியுள்ளது. இந்த விஷயம் வெளியூரில் இருந்து வீடு திரும்பிய அறிவழகனுக்கு தெரியவர, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ராஜசேகருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய ரேகா திட்டமிட்டுள்ளார். அதன்படியே, இரவில் தூங்கிக்கொண்டிருந்த தன் கணவரை, ராஜசேகருடன் சேர்ந்து கழுத்தை நெறித்தும், முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியும் கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்னர் அறிவழகனின் பிறப்புறுப்பும் நசுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூர கொலையை செய்துவிட்டுதான், ரேகா நாடகமாடியுள்ளார். விசாரணையின் உண்மை தெரியவர, ராஜசேகர் மற்றும் ரேகாவை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
(செய்தி: ராஜாராம், புதிய தலைமுறை செய்தியாளர், மயிலாடுதுறை)