உழைப்பாளர் தினமான மே தினத்தையொட்டி ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அளித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை அளித்து அவர்கள் வாழ்வில் உயர வழி வகை செய்வது என அனைவரும் உறுதி ஏற்போம் என கூறியுள்ளார்.
தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும் என்றும், அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் நாடும் வீடும் வளம் பெறும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருவாவுக்கரசர், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைப்பை வழங்கி தங்களை அர்ப்பணித்து கொண்ட தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் அல்லல்படும் ஆலை தொழிலாளர்களும் விவசாய தொழிலாளர்களும் இடர்களில் இருந்து விடுபட்டு மகிழ்வுடன் வாழும் நிலை மலரட்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார்.
தொழிலாளர் நலன் காப்போம், அவர்கள் வாழ்வில் உயர வழிகாண்போம் என தொழிலாளர் தினத்தில் சபதம் ஏற்போம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தொழிலாளர்கள் அனைத்து வளங்களையும், நலங்களையும் பெற்று வாழ வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
உலகமயமாக்கல், மதவாத, சாதியவாத சக்திகளுக்கு எதிராக, உழைக்கும் மக்கள் போராட முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி வெளியிட்டுள்ள மே தின செய்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது கடின உழைப்பை தரும் தொழிலாளர் வர்க்கத்துக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறியுள்ளார்.