மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் என எதிர்பார்ப்பு
கனமழை காரணமாக கர்நாடக மாநிலம் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரியாற்றில் சுமார் 90ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரியாற்றில் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் நாளைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழுகொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 311 கன அடியாகக் குறைந்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 50 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 800 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.