
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் சென்னை அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடையில் பாரம்பரிய உணவான பணியாரம் மற்றம் கருப்பட்டி காபியை தனது மகளுடன் சேர்ந்து சுவைத்து மகிழந்துள்ளார். இதை மேத்யூ ஹைடனின் மகள் கிரேஸ் ஹைடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், பன்னாட்டு வீரர்கள் இங்கு குவிந்துள்ளனர். சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக தமிழகம் வந்துள்ள மேத்யூ ஹைடன், அவ்வப்போது தனது மகளுடன் காரில் ஊர் சுற்றி வருகிறார். இதையடுத்து சென்னை அருகே உள்ள மண்ணிவாக்கம் வழியாக சென்ற அவர், அங்கிருக்கும் கருப்பட்டி காபி கடையில் சற்று இளைப்பாறி உள்ளார்.
அப்போது அங்கு கருப்பட்டி காபி மற்றும் பணியாரத்தை அவரும் அவரது மகளும் சாப்பிட்டு ரசித்துள்ளனர். மேலும் பணியாரம் சுடுவது எப்படி என்பதை அந்த கடைக்காரர் ஹைடனிடம் விளக்கியுள்ளார். அதனை வீடியோ எடுத்துள்ள கிரேஸ் ஹைடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தமிழக பாரம்பரிய உணவான பணியாரம் மற்றும் கருப்பட்டி காபி மிகவும் ருசியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை சர்க்கரையில் மட்டும் காபி போன்ற பானங்களை தங்கள் நாட்டில் அருந்தி இருப்பதாகவும் தமிழ்நாட்டில் பாரம்பரிய உணவான கருப்பட்டி காபி தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் மேத்யூ ஹேடனும் அவரது மகளும் புகழ்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்த கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மேத்யூ ஹைடன் மற்றும் அவரது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.