மலைப்பாம்பும் நாயும் கட்டிப் புரண்ட வைரல் வீடியோ
ராட்சத மலைப்பாம்பு ஒன்று நாயைக் கவ்வி சுருட்டிக்கொல்ல முயலும் போது, அந்த நாயை சில இளைஞர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் சியாங் மாய் எனும் பகுதியில் கறுப்பு நிற நாய் ஒன்றை, மலைப்பாம்பு ஒன்று கடித்து அதனை சுருட்டியது. நாயின் பின்னங்கால்கள் மற்றும் வால் பகுதி மட்டுமே தெரியும் அளவிற்கு, மலைப்பாம்பு அதனை தனது உடம்பால் சுற்றி முறுக்கியது. நாய் மலைப்பாம்பிடம் இருந்து மீள முடியாமல், அலறியது. அப்போது அருகே இருந்த மற்றொரு வெள்ளை நிற நாய், மலைப்பாம்பை எதிர்த்து குரைத்துக்கொண்டிருந்தது. இதனைக் கண்ட இளைஞர்கள் சிலர், கையில் ஒரு குச்சியையும், துடைப்பத்தையும் எடுத்துக்கொண்டு நாயை மீட்க முயன்றனர்.
ஆனால் மலைப்பாம்பு நாயை இறுக்கமாக சுற்றிக்கொண்டிருந்ததால், அதனை மீட்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் நாய் இறந்துவிடும் என்ற நிலை வந்தது. அப்போது ஒரு இளைஞர் துரிதமாக மலைப்பாம்பின் வாலைப்பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார். அதனால் மலைப்பாம்பின் பிடி சற்று தளர்ந்தது. பின்னர் மற்றொரு இளைஞர் மலைப்பாம்பை துடைப்பத்தின் குச்சின் மூலம் அகற்ற முயன்றார். ஆனால் மலைப்பாம்பு பலமாக நாயைக் கடித்துக்கொண்டு இருந்தது. பின்னர் சற்று நேர போராட்டத்திற்குப் பிறகு பிடியை தளர்த்தியது மலைப்பாம்பு. அருகே இருந்து மற்றொரு வெள்ளை நிற நாய் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மலைப்பாம்பை கடித்து அச்சுறுத்தியது.
அப்போது நாயின் காலைப் பிடித்து ஒரு இளைஞர் தூக்கித் தள்ளினார். இதனால் விடுபட்ட நாய் பாய்ந்து ஓடியது. ஆனால் மலைப்பாம்பு சட்டென விரைந்து அதை மீண்டும் கவ்வியது. உடனே மலைப்பாம்பை தடுத்து, நாயை இளைஞர்கள் மீட்டனர். பின்னர் நாய் அலறிய படி, அங்கிருந்து ஒடியது. மலைப்பாம்பும் அங்கிருந்து நகர்ந்து மரங்கள் இருக்கும் அடர்ந்த பகுதிக்குள் சென்றது. இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள், அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். இந்தக் காட்சிகள் தாய்லாந்தில் வைரலாக பரவியுள்ளது.