மசாஜ் சென்டர்கள் அரசு உரிமம் பெற வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
மசாஜ் சென்டர்கள் ஒரு மாதத்திற்குள் அரசு உரிமம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மசாஜ் சென்டர்கள் தொழிலில் தலையிட காவல்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி ரவிச்சந்திரபாபு விசாரித்தார். அப்போது, மசாஜ் சென்டர்கள் நடத்த மாநில அரசின் தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் கோரி ஜூன் மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் பெறக்கோரி ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என மசாஜ் சென்டர்களுக்கு உத்தரவிட்டார். இந்த விண்ணப்பங்களை ஜூன் மாதத்துக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
மேலும், மசாஜ் சென்டர்களுக்கு உரிமம் வழங்குவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட தமிழக உள்துறை செயலாளருக்கு ஆணை பிறப்பித்தார். ஜூன் மாதம் வரை மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் மசாஜ் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற உத்தரவு தடையாக இருக்காது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.