ஜல்லிக்கட்டுக்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என அறிவித்த பிறகும் சென்னை மெரினாவில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் மாணவர்களிடம் திரைப்பட நடிகர் லாரன்ஸ், திரைப்பட நடிகர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் சொன்னார்கள். இவர்களை தொடர்ந்து 30 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு மாணவர்களிடையே ஜல்லிக்கட்டு தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் குறித்து விளக்கினர்.
இதனையடுத்தும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் மாணவர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படாதவாறு அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். பின்னர் சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேறியது குறித்த தகவல் கிடைத்தவுடன் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

