கோவையில் பதுங்கியிருந்த பெண் மாவோயிஸ்ட் கைது..!
கோவை ஆனைக்கட்டி பகுதியில் பதுங்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஷோபாவை போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகள் ஊடுருவல்களை தடுக்கும் காவல்துறையினரால் க்யூ பிரிவு என்ற தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் இருப்பதாக, க்யூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் கோவை ஆனைக்கட்டி பகுதியில் பதுங்கியிருந்த கர்நாடகாவை சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஷோபா என்பவரை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஷோபாவை விசாரணைக்காக ஈரோடு மாவட்டம் ஆனைக்கல் பாளையத்திலுள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து ஷோபா, பதுங்கியிருந்ததற்கான காரணம் குறித்தும் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் மாவோயிஸ்ட் ஷோபாவை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . கைது செய்யப்பட்ட ஷோபா மீது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதுவரை 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.