சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பல இடங்களில் விபத்து..!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்துகளில் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளாமான மக்கள் பொது இடங்களில் திரண்டனர். காவல்துறையினர் ஏற்கனவே போக்குவரத்து மாற்றம் செய்திருந்த நிலையில், சில இடங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் அண்ணாசலை, மெரினா, ராதாகிருஷ்ணன் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த வாகன விபத்தில் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சை அளிப்பதற்காக 30 மருத்துவர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.