“அண்ணாமலை பேசியது ஊடகத்தினரை மிரட்டும் செயல்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

“அண்ணாமலை பேசியது ஊடகத்தினரை மிரட்டும் செயல்” - அமைச்சர் மனோ தங்கராஜ்

“அண்ணாமலை பேசியது ஊடகத்தினரை மிரட்டும் செயல்” - அமைச்சர் மனோ தங்கராஜ்
Published on

விரைவில் ஊடகம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் என்று தமிழக பாஜகவினுடைய மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து ஊடகங்களை மிரட்டும் செயல் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறை மையமாக வைத்து புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது. 3 கோடி ரூபாய் செலவில் புதிய தாலுகா கட்டடத்திற்காக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக பாஜக தலைவர் தமிழக ஊடகங்கள் அனைத்தும் 6 மாதங்களில் தங்களுக்கு ஆதரவாக செய்திகள் விடுவார்கள் என்று கூறியிருப்பது ஊடகத்தை மிரட்டுகிற செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகத்துறை என்பது தனித்துவமாக செயல்பட அனுமதிக்க வேண்டிய துறை. கருத்து சுதந்திரத்தை பதிவு செய்ய வேண்டிய கடமையை, தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுத்த கட்டாயபடுத்துவது என்பதை மிரட்டல் தொனியாகவே பார்க்கிறேன்.

ஊடக விவாதங்களில் அதிமுக கலந்து கொள்ளாது என அறிவித்திருப்பது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அதிமுகவிடம் பதில் இல்லை. உரிய பதில் இருந்திருந்தால் ஊடகங்களில் உற்சாகத்தோடும் நேர்மையோடும் சந்தித்திருப்பார்கள். திமுக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அரசிடம் குறைகூற ஒன்றும் இல்லாததால், அவர்கள் இது போன்ற விவாதங்களை தவிர்க்க முடிவு செய்கிறார்கள்.

சிறுபான்மையினருக்கு திமுக எப்போதும் பாதுகாப்பாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் ஒரு சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை மத ரீதியாக பெரிதுபடுத்தாமல் அனைத்து சமூக மக்களும் இணைந்து வாழுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்” என்றார்.

முன்னதாக, கட்சியினரிடையே பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் பிஜேபி குறித்து பொய்யான செய்திகள் வெளியிட்டு வருவதை நீங்கள் மறந்து விடுங்கள். அதனை 6 மாதத்திற்குள் கட்டுபடுத்தலாம். கையிலெடுக்கலாம். அதை பற்றி கவலை படாதீர்கள். தொடர்ந்து பொய்யான விசயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. இந்த ஊடகங்களை கட்டுபடுத்தும் துறையின் அமைச்சராக கட்சியின் முன்னாள் தலைவர் எல்.முருகன் வந்துள்ளதால் தொடர்ந்து தவறான செய்தியை சொல்ல முடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது. இதை நிச்சயம் உடைப்போம்” எனப் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com