ராஜராஜன் ஆட்சியில் கோயிலில் திருவாசகம், தேவாரம்.. திருமாவளவன் கருத்திற்கு மன்னர் மன்னன் எதிர்ப்பு!
தமிழ் மன்னர்களை விமர்சித்த திருமாவளவனின் கருத்துக்கு மன்னர் மன்னன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராஜராஜ சோழனின் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, மேலும் தேவாரம், திருவாசகம் பாடுவதற்காக 48 பேர் இருந்தனர். திருமாவளவன் வரலாற்றை முழுமையாக அறியாமல் அவதூறு பரப்புகிறார் என மன்னர் மன்னன் கூறினார்.
சேர, சோழ, பாண்டியர்கள் என தமிழ் மன்னர்களின் பெயர்களை குறிப்பிட்டு, விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்திருந்தது சர்ச்சையாகியுள்ளது. தமிழ்க் கலாச்சாரத்தை அழித்தவர்கள் மூவேந்தர்கள் என்றும், அவர்களது காலத்தில்தான் தமிழ்நாடு குட்டிச்சுவரானது எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சுக்கு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தசூழலில் எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான மன்னர் மன்னன் திருமாவளவனின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராஜ ராஜன் ஆட்சியில் கோயிலில் தேவாரம், திருவாசகம்..
திருமாவளவனின் சர்ச்சை கருத்து குறித்து பேசியிருக்கும் எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான மன்னர் மன்னன், ராஜராஜ சோழனின் இயற்பெயர் என்பது அருள்மொழி என்பதாகும். இது சுத்தமான தமிழ் பெயர். ஆனால் ராஜராஜனுக்கு 25-க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. மக்களால் எந்த பெயர் அதிகமாக பயன்படுத்தப்பட்டதோ, அந்தப் பெயர் தான் ராஜராஜ சோழன் என்று இருக்கிறது.
குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்தில் தான் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ராஜராஜசோழன் தமிழ்நாட்டினுடைய பகுதியை மட்டும் ஆட்சி செய்யாமல் பல்வேறு மொழி பேசக்கூடிய மக்கள் வசித்த பகுதிகளையும் ஆட்சி செய்தார். ஆகையால் பல பெயர்களால் ராஜராஜன் அழைக்கப்பட்டார். அதில் ஒன்றுதான் தற்போது இருக்கக்கூடிய ராஜராஜன். அதற்காக அவரை சங்கி என்று சொல்வதை ஏற்க முடியாது.
ராஜராஜனுடைய ஆட்சியில் தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்காக 48 பேர் இருந்தனர். அதனுடைய தலைமையாக இருந்தவரும் தமிழ் மொழி பேசக் கூடியவராக தான் இருந்தார்” என பேசியுள்ளார்.
தலித் என்பது தமிழல்ல.. அதனால் திருமாவளவனை சங்கி எனலாமா?
மேலும், “திருமாவளவன் தலித் என குறிப்பிட்டு பேசக்கூடிய வார்த்தையில் தலித் என்பது சமஸ்கிருதமாகம். அப்படி என்றால் திருமாவளவனை சங்கி என்று சொல்லலாமா?
ராஜராஜன் குறித்த வரலாற்றை முழுமையாக அறியாமல் திருமாவளவன் அவதூறை பரப்பிக் கொண்டிருக்கிறார். முழுமையாக வரலாற்றை திருமாவளவன் அறிந்து கொள்ள வேண்டும். முதல்முறையாக இது போன்ற அவதூறை திருமாவளவன் பரப்பவில்லை. இதற்கு முன்பாகவும் பேசியிருக்கிறார். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு எதிர்ப்பு என்பது இல்லாமல் இருந்தது. தற்பொழுது எதிர்ப்பு குரல் தொடங்கி இருக்கிறது.
கருணாநிதி அவர்கள் ராஜராஜனுடைய ஆயிரமாவது ஆண்டையொட்டி நெல் ரகத்திற்கு ராஜராஜன் ஆயிரம் என்று பெயர் சூட்டி இருக்கிறார். ராஜராஜனுக்காக வெள்ளி நாணயம் வெளியிட வேண்டும் என்று பேசி இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார். சோழருடைய ஆட்சியை கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் கூட பேசி இருக்கிறார். இப்படி திமுக ஒரு நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய விலையில், அதில் இருக்கக்கூடிய திருமாவளவன் மாறுபட்டு இருக்கிறார்.
ஆகவே திருமாவளவன் அவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை நிழ்கால அரசியலும் தெரியவில்லை” என்று எழுத்தாளர் வரலாறு ஆய்வாளருமான மன்னர் மன்னன் விமர்சித்துள்ளார்.

