தனித்தீவானது மாஞ்சோலை.. அதீத கனமழையால் சாலையில் மண்சரிவு.. போக்குவரத்து துண்டிப்பு

தனித்தீவானது மாஞ்சோலை.. அதீத கனமழையால் சாலையில் மண்சரிவு.. போக்குவரத்து துண்டிப்பு
தனித்தீவானது மாஞ்சோலை.. அதீத கனமழையால் சாலையில் மண்சரிவு.. போக்குவரத்து துண்டிப்பு

மாஞ்சோலையில் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து ஆகிய மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. காபி, தேயிலை எஸ்டேட் பகுதிகளான இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த அணைகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாஞ்சோலை அமைந்துள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பதால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளிலிருந்து 50 ஆயிரம் கன அடிக்கும் மேலாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கடந்த 13-ம் தேதி காலை 6 மணி வரையிலான நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாஞ்சோலை பகுதியில் 346 மில்லிமீட்டர் மழையும், ஊத்து பகுதியில் 517 மி.மீ. மழையும் நாலுமுக்கு பகுதியில் 372 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாகவும் இதன் காரணமாகவே மணிமுத்தாறு அணைப்பகுதிக்கு அபரிமிதமான வெள்ளம் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கனமழையின் காரணமாக மாஞ்சோலை செல்லும் மலைச்சாலையில் பல இடங்களில் மண்சரிவு, பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. மரங்களும் சாலைகளில் சாய்ந்துள்ளன. இதனால் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பொங்கலுக்கு பொருள்களை வாங்குவதற்குக் கூட சமவெளிப் பகுதிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை பகுதியில் வனத்துறை அலுவலா்கள் முகாமிட்டு, தொழிலாளா்களின் தேவைகளை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மலைச் சாலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com