\
Manickam Tagore Outlines TN Congress' Next Mission
மாணிக்கம் தாகூர்Pt web

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார் மாணிக்கம் தாகூர்.. அடுத்த இலக்கு என்ன? வீடியோ வெளியீடு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பதை காங்கிரஸ் கட்சி அடைவிட்டதாக கூறியுள்ளதுடன், அடுத்த இலக்கு என்ன என்பது குறித்தும் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.
Published on

தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக 6 மாதங்களாகவே திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் இணக்கமான சூழல் இல்லை. காங்கிரஸில் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பினர். அதில் முக்கியமான விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர். தொடர்ந்து, திமுகவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்த நிலையில், அவருடன் திமுகவிடனரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது.

மாணிக்கம் தாகூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
மாணிக்கம் தாகூர் - அனிதா ராதாகிருஷ்ணன்web

ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால் திமுகவும்-காங்கிரசும் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. தேர்தலுக்குப் பிறகு, செல்வப்பெருந்தகை மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்படலாம் என அப்போது தகவல்களும் வெளியாகி வந்தன. செல்வப்பெருந்தகையும் கூட மாநிலத் தலைவர் பொறுப்பை தானே ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்திருந்தார்.

Manickam Tagore Outlines TN Congress' Next Mission
காங்கிரஸின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்.. மாணிக்கம் தாகூரின் அரசியல் பயணம்!

இந்தசூழலில் தான், சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி எதிர்பாராத வகையில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்திருக்கிறது. தேர்தல் முடிவிற்குப் பிறகு, உடனடியாக உறவை முறித்துக்கொண்டு தவெகவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் கட்சி. சொல்லாமல் கொள்ளாமல் காங்கிரஸ் கூட்டணி மாறியதாக திமுக தரப்பில் இருந்து விமர்சங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பாஜகவுடன், அதிமுகவுடன் கூட்டணி பேசியதாலேயே வெளியேறியதாக வெளிப்படையாக பதிலடி கொடுத்திருந்தார் எம்.பி. மாணிக்கம் தாகூர்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகைX

இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமையிடம் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸில் இருந்து ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் நிலையில், மாணிக்கம் தாகூர் காங்கிரஸுக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Manickam Tagore Outlines TN Congress' Next Mission
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி? பஹ்ரைனை குறிவைத்த ஈரான் ட்ரோன்கள்!!

இந்தசூழலில் தான், எம்.பி மாணிக்கம் தாகூர், தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டது குறித்துப் பேசி வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்பது மிகவும் சவாலான பொறுப்பு என்பதை உணர்கிறேன். அதே நேரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் இந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ஆட்சியில் காங்கிரஸ் மீண்டும் பங்கேற்றுள்ளது. தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் காங்கிரஸ் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது" என்றார்.

மேலும், "ஆட்சியில் பங்கேற்பது என்ற இலக்கை அடைந்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்குவது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான வலுவான கூட்டணி நம்முடன் உள்ளது. அந்த கூட்டணியுடன் மக்களிடம் சென்று காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, வரும் 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கர், முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.வி. தங்கபாலு, அழகிரி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, "நம்பிக்கையுடன் புதிய பயணத்தை தொடங்குகிறோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலிமையான மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Manickam Tagore Outlines TN Congress' Next Mission
அரசியல் மாற்றம் ஏன் கொள்கையிலிருந்து அல்ல, உணர்ச்சியிலிருந்து தொடங்குகிறது..!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com