\
Manickam Tagore
Manickam TagorePT

மேகதாது விவகாரம்| ’கர்நாடகா தலைவர்கள் போல் தமிழக தலைவர்கள் இல்லை..’ - மாணிக்கம் தாகூர்

தொகுதி மறுவரையறை, மேகதாது விவகாரங்களில் தமிழக உரிமையை தியாகம் செய்ய முடியாது; தண்ணீரை விட அரசியல் லாபத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர்களை மக்கள் கவனிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
Published on
Summary

தொகுதி மறுவரையறை மசோதா தமிழகத்தின் நலன், மாநில உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்தானது என மாணிக்கம் தாகூர் எச்சரிக்கிறார். தி.மு.க. முன்வைத்த எதிர்ப்புக்கு முன்பு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. போன்ற கட்சிகள் இப்போது நிலைப்பாட்டை மாற்றினால் மக்கள் கவனிப்பார்கள் எனவும் கூறினார்.

செய்தியாளர் - M. மீரா

தொகுதி மறுவரையறை தமிழகத்திற்கு ஆபத்து; மேகதாதுவில் அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட அதே மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், இது தமிழகத்தின் நலன், மாநில உரிமைகள் மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு எதிரானது என்பதால் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்பதால், இந்த விவகாரத்தில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய அவர், தி.மு.க. முன்வைத்த எதிர்ப்புக்கு முன்பு அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்ததாக நினைவுபடுத்தினார். தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து யார் விலகுகிறார்கள் என்பதை மக்கள் கவனிப்பார்கள் என்றும் கூறினார். ராகுல் காந்தி கூறிய "தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிக்காதவர்கள் எட்டப்பர்கள்" என்ற கருத்தை சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், அந்த பட்டியலில் தற்போது அ.தி.மு.க. மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளதாக விமர்சித்தார்.

Manickam Tagore
Manickam Tagorescreen shot

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், கர்நாடக தலைவர்கள் மாநில நலனுக்காக ஒரே குரலில் பேசுவதாகவும், அதேபோல் தமிழகத்திலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து நிறைவேற்றிய மேகதாது எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரித்துவிட்டு, வெளியே வந்து அதற்கு முரணான கருத்துகளை தெரிவிப்பது மாநிலத்தின் ஒற்றுமையை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் சிலருக்கு தண்ணீர் பிரச்சினையை விட அரசியல்தான் முக்கியமாக இருக்கிறது. மேகதாது அணையை தடுக்க வேண்டும் என்ற அக்கறையை விட அரசியல் லாபமே முக்கியமாக உள்ளது. ஆனால் கர்நாடகாவில், அரசியலை விட தண்ணீர் பிரச்சினைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும், கர்நாடகாவில் ஆளும்–எதிர்க்கட்சிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் மாநில நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்திலும் காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அரசியலைத் தாண்டி தமிழக உரிமைக்காக ஒரே நிலைப்பாட்டில் செயல்பட வேண்டும் என்றார். இறுதியாக, தமிழ்நாடும் கர்நாடகாவும் இந்தியாவின் அண்டை மாநிலங்கள் என்பதால், இரு மாநில முதலமைச்சர்களும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது இயல்பானது; அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

Manickam Tagore
2 நாளில் அணை நிரம்பியது எப்படி? காவிரி கண்காணிப்பு குழுவின் லட்சணம் இது தானா? - பெ. சண்முகம் கேள்வி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com