யார் இந்த சதுர்வேதி சாமியார்? போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

யார் இந்த சதுர்வேதி சாமியார்? போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி?
யார் இந்த சதுர்வேதி சாமியார்? போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

செல்போன் உபயோகிக்காததாலும், மாறுவேடத்தில் சுற்றுவதாலும் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் சதுர்வேதி சாமியாரை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை தியாகராயநகரில் அறக்கட்டளை நடத்தி வந்த சதுர்வேதி சாமியாரை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. 2004ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சதுர்வேதி சாமியார் சற்று இடைவெளி விட்டு தற்போது மீண்டும் செய்திகளில் அடிபடத் தொடங்கியிருக்கிறார். 

முதுநிலை பட்டதாரியான சதுர்வேதி சென்னை தியாகராய நகரில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்றுவார் சதுர்வேதி. இவருக்கு பிரசன்ன வெங்கடாச்சாரியார், வெங்கட சரவணன் போன்ற பெயர்களும் உண்டு. 

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் தொழில் ரீதியாக தனக்குள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்கக்கோரி கடந்த 2004ஆம் ஆண்டு சதுர்வேதியை நாடியுள்ளார். குறிப்பிட்ட நபரின் பிரச்னையை தீர்ப்பதாகக்கூறி அவர் வீட்டுக்குச் சென்ற சதுர்வேதி அங்கு சிறப்பு பூஜைகளை நடத்தியிருக்கிறார். 

தனது சித்து வேலைகளை காட்டி தொழிலதிபரின் மனைவி மற்றும் 16 வயது மகளை கவர்ந்திருக்கிறார் சதுர்வேதி. நாளடைவில் பூஜை செய்யப்போன வீட்டின் கீழ்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். விசேஷ பூஜை என்ற பெயரில் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை சதுர்வேதி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. தனது அறைக்குள்ளேயே இருவரையும் அடைத்து வைத்து பலமுறை வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி லட்சக்கணக்கில் தொழிலதிபரிடம் இருந்து பணம் பறித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய தொழிலதிபரை தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக தனது வாழ்க்கை மாறிப்போனதை அறிந்து தொழிலதிபர் தவித்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகளை ஆந்திராவிற்கு கடத்திச் சென்றுவிட்டார் சதுர்வேதி. இருவரையும் மீட்டுத்தரும்படி காவல்துறையை தொழிலதிபர் நாடினார். சதுர்வேதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. அதன்பின் சதுர்வேதி சாமியார் மீது புகார்கள் குவிந்தன. 

பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு எனப் பல புகார்கள் வரிசைகட்ட 23 பிரிவுகளில் சதுர்வேதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டு சதுர்வேதி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த சதுர்வேதி 2016ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகி விட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. தலைமறைவாக இருக்கும் சதுர்வேதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சதுர்வேதி அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றுவதாலும், மாறுவேடம் பூண்டு சுற்றுவதாலும், செல்போன் உபயோகிக்காததாலும் அவரை பி‌டிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அவர் வடமாநிலங்கள் அல்லது நேபாளத்தில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சதுர்வேதியை பிடிக்க போலீசாரும் வடமாநிலங்களில் தஞ்சம் அடைந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com