“நிலத்தை அபகரிப்பு செய்து விட்டனர்” - குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல்
நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் பாலமுருகன். இவரது குடும்பத்துக்கு சொந்தமான இடத்தை அதே ஊரை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதுகுறித்து தட்டிக்கேட்டபோது, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பாலமுருகன் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலை அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாலமுருகன் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஆட்டோவில் வந்து இறங்கினார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.