சென்னை திருநின்றவூரில் ஒருவர் தற்கொலை: ஊரடங்கு வறுமை காரணமா?
சென்னை திருநின்றவூரில் ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக 41 வயதுடைய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் கணபதி நகரை சேர்ந்தவர் சிவகுமார்(41). இவருக்கு கெளரி(35) என்ற மனைவியும் லாவண்யா(14) என்ற மகளும், கிரிஷ் (9) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சிவகுமார் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாதமாக வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் வருமானமின்றி குடும்பத்தில் பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிவகுமாருக்கும் கெளரிக்கும் கடந்த ஒரு சில தினங்காக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று வழக்கம் போல் குடும்ப செலவிற்கு பணம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பெட்ரூம் சென்ற சிவகுமார் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.